.webp)

COLOMBO (News 1st) உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தகவல்களை வழங்கும் ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஏபியூ எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாடு கொழும்பில் இன்று (30) ஆரம்பமானது.
சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துகின்றன.
ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதன் பொதுச் செயலாளர் அஹமட் நதீம் மற்றும் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நர்கீஸா நுமனோவா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று (30) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை, Cinnamon Life - City of Dreams மற்றும் இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பொதுச் சபை மாநாடும் அதனுடன் இணைந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
1964ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கம், 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 230க்கும் அதிகமான இலத்தரனியல் ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
தற்போது, புவியியல் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பாளர்கள் சங்கமாக இது விளங்குகின்றது.
சர்வதேசத்தின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களையும், பிராந்தியத்தில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக வலையமைப்புகளையும் ஒன்றிணைக்கும் இந்தச் சங்கம், உலக சனத்தொகையில் 300 கோடிக்கும் அதிகமான மக்களை சென்றடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பொது சபை மாநாட்டை முன்னின்று நடத்துவதற்கான பொறுப்பு, உறுப்பினர்களின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.
அதற்கமைய, உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன், தனியார் ஊடக வலையமைப்பான சிரச ஊடக வலையமைப்பு, 63ஆவது பொதுச்சபை மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.
பொதுச் சபை மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Cinnamon Life -City of Dreams வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகத்தில், பிராந்தியத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் இசை மற்றும் கலை நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளது
