ஈஸ்டர் தாக்குதலில் 15 பேர் குற்றவாளிகள் - மேல் நீதிமன்றம் தீர்ப்பு

by Staff Writer 22-09-2026 | 8:35 PM

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவி மற்றும் அனுசரணை வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 15 பேர் குற்றவாளிகளென அறிவிக்கப்பட்டதுடன் 09 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அங்கம் வகிக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை இன்று(22) அறிவித்தது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

01 மொஹம்மது நௌஃபர் மௌலவி
02. மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)
03. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான்
04. மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா 
05. மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் 
06. மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் 
07. மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் 
08. அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ் 
09. மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் 
10. அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி 
11. ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர் 
15. மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன் 
16. மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் 
18. ராசிக் ரசா ஹூசைன்
19. கச்சி முஹம்மது முஹம்மது ஜெம்சித் 
ஆகியோரே குற்றவாளிகளென அறிவிக்கப்பட்டனர்.

12. மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் 
13. மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் 
14. ரஷீட் மொஹமட் இப்ராஹிம் 
20. செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம் 
21. மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான் 
22. மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி 
23. மொஹமட் அமீர் முஹம்மது அயதுல்லா 
24. ஹில்மி என்றழைக்கப்படும் மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி    
25.மொஹமட் அக்ரம் அஹ்கம் 
ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் ஏற்கனவே உயிரிழந்தார்.

சுமார் 5 வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி நிறைவிற்கு வந்தது.

பிரதிவாதிகள் 24 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதோடு, அந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2309 பேர் சாட்சியமளித்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத்தின் 07 நீதியரசர்கள் கொண்ட அமர்வு கடந்த 2023 ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அப்போதைய தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் மற்றும் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரும் இதில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 11 தரப்பினரால் தாக்கல் செய்யப்படட அடிப்படை உரிமை மனுக்களே இந்த வழக்கின் போது விசாரிக்கப்பட்டன.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும் அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு 50 மில்லியன் ரூபாவும் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.

நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக உடனடியாக பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் விசாரித்த வழக்கின் தீர்ப்பு 2026 ஜூலை 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளில் வழங்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பாகும்.

நீதிபதிகள் அமர்வின் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பாக இது அமைந்தது.

இந்த வழக்கு அரசாங்கத்தின் சார்பில் சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றவியல் வழக்கின் தீர்ப்பே இன்று அறிவிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், பிரதிவாதியொருவர் ஏற்கனவே உயிரிழந்ததையடுத்து, 24 பிரதிவாதிகள் தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலும் மற்றுமொரு வழக்கு இந்த தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்ன சம்பவம் இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

2026 பெப்ரவரி 25ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த மே 03ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணங்களைத் தடை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 04 முக்கிய வழக்குகள் காணப்படுகின்றன.

இதனைத்தவிர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் பல சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.