2027ஆம் ஆண்டின் கல்வி மறுசீரமைப்பு திட்டம்

2027ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரத்திற்கு வரலாறு மற்றும் அழகியல் உள்ளிட்ட 7 பாடங்கள் உள்ளடக்க திட்டம்.

by Staff Writer 15-09-2026 | 12:40 PM

COLOMBO (News 1st)  2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி மறுசீரமைப்பின் கீழ் க.பொ.த சாதாரண தரத்துக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை மாத்திரம் உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.