போட்டி சாதனையுடன் வெற்றியீட்டிய புவிதரன்

தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் வட மாகாண வீர, வீராங்கனைகள் ஆதிக்கம்

by Rajalingam Thrisanno 04-09-2026 | 7:37 PM

Colombo (News 1st) 104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் வட மாகாண வீர, வீராங்கனைகள் முதல் நாளில் பிரகாசித்துள்ளதுடன் கோலுன்றிப் பாய்தலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் தியமகவில் இன்று(04) ஆரம்பமானது.

இதில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியில் அவர் 5.10 மீட்டர் உயரத்துக்கு ஆற்றலை வௌிப்படுத்தினார்.

5 மீட்டர் உயரத்துக்கு தாவிய எரங்க ஜனித் வௌ்ளிப்பதக்கத்தையும் 4.90 மீற்றர் உயரத்துக்கு திறமையை வௌிப்படுத்திய முன்னாள் சாம்பியனான இஷார சந்தருவன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் 3 இடங்களையும் யாழ். மாவட்ட வீராங்கனைகளே கைப்பற்றினர்.

3.60 மீட்டர் தூரம் தாவி முதலிடத்தை ஈட்டிய நேசராசா தக்சிதா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

3.30 மீட்டர் உயரத்துக்கு தாவிய செல்வராசா நிருக்‌ஷிதா வௌ்ளிப்பதக்கத்தை வென்றதுடன் மதியழகன் தர்ஷனா 3 மீற்றர் உயரத்துக்கு தாவி வெண்கலப்பதக்கத்தை அடைந்தார்.

ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 16.41 மீற்றர் தூரத்துக்கு திறமையை வௌிப்படுத்திய யாழ்ப்பாணத்தின் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

14.91 மீட்டர் தூரம் குண்டெறிந்த ஜே.ஆர் அல்விஸ் வௌ்ளிப்பதக்கத்தையும் 14.47 மீட்டர் தூரம் ஆற்றலை வௌிப்படுத்திய ஆர்.எஸ் ஜயவர்தன வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.