UNDP- சுகாதார அமைச்சு ஒப்பந்தம்

சுகாதார அமைச்சு - ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட குழு (UNDP) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

by Staff Writer 03-09-2026 | 7:51 AM

Colombo (News 1st)  நாட்டிற்கு தேவையான மருந்துகளை விநியோகிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுகாதார - வெகுசன ஊடக அமைச்சுக்கும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்திற்கும் (UNDP) இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 
நாட்டு மக்களுக்கு தடையின்றியும் வினைத்திறனாகவும் தேவையான மருந்துகளை விநியோகிப்பதே இதன் நோக்கமாகும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் நாட்டின் தற்போதைய தேசிய விலைமனுகோரல் முறைகள் மூலம் பெற்றுக்கொள்ள சிரமமாகவுள்ள முக்கிய மருந்துகளை சர்வதேச விலைமனுகோரல் முறைகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மருந்து விநியோகம் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தவும் சுகாதாரச் சேவை விநியோக அமைப்பின் வினைத்திறனை அதிகரிக்கவும் இந்த உடன்படிக்கை பங்களிக்குமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் நிதி அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.