.webp)

Colombo (News 1st) மோசடி மற்றும் அறிமுகமல்லாத வௌிநபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக பொலிஸாரினால் விசேட வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட வெவ்வேறு தகவல் தொடர்பு முறைமைகள் ஊடாக பெண்களை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்தமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்களை வழங்கி மயக்கமடையச் செய்து, பெண்களின் சொத்துக்களை கொள்ளையடித்தல், திருமணம் செய்துகொள்வதாக போலி வாக்குறுதி வழங்கி பணம் மற்றும் சொத்துக்களை பெற்று மோசடியில் ஈடுபடுதல் மற்றும் கொலை செய்தல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள், பொதுப் பாதுகாப்பு குழுக்கள், புலனாய்வு மற்றும் சிவில் அதிகாரிகள் ஊடாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவதாகவும் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிமுகமில்லாத வௌிநபர்கள், இணையம் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களுடன் பழகும்போது அவர்கள் மீது நம்பிக்கை வைத்து பணம், தங்க நகைகள் அல்லது பிற பெறுமதியான சொத்துக்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் முக்கியமான படங்கள் மற்றும் காணொளிகளை அறிமுகமில்லாத மற்றும் சந்தேகத்திற்குரியவர்களுடன் பகிர வேண்டாம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் ஊடாக ஏதேனும் கொடுக்கல் - வாங்கல்கள் அல்லது சந்திப்புகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தாம் அல்லது தமக்கு தெரிந்த எவரேனும் இவ்வாறான சம்பவங்கள் அல்லது மோசடிக்கு உள்ளாகியிருந்தால், அது தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறுவர் விவகார மற்றும் மகளிர் பணியகத்திலோ முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
118, 119, 107, 109 ஆகிய துரித இலங்கங்களுக்கு அழைத்து இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களிருந்து தங்களது பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
