நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைக்க நடவடிக்கை

நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை

by Staff Writer 17-06-2026 | 5:11 PM

Colombo (News 1st) திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 'Gun Site' எனப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 60 பேரை தடுத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட பல பாரிய குற்றச் செயல்களுக்கு குறித்த பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சிறை வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பதற்காக திருகோணமலை நீதவான் நாளை(18) குறித்த பகுதியை பார்வையிடவுள்ளார்.

தற்போது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவத்திற்கு மேலதிகமாக மேலும் சிலர் குறித்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.

இவர்களில் கேகல்ல ஷாந்த தொடர்பான வழக்கின் விசாரணைகள் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை தவிர கொழும்பில் மேலும் 02 தமிழ் இளைஞர்கள் தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 03-இல் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இப்பாகமுவ பிரதீப் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 02 யுவதிகள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விடயங்களும் நீதிமன்றங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க தற்போது முன்வந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.