.webp)
Colombo (News 1st) 10ஆவது ஆசிய பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் ஊடக மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பேரவை இன்று(16) பூட்டானின் பாரோ நகரில் ஆரம்பமானது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், அனர்த்தங்களை தடுத்தல் மற்றும் ஊடகத்துறையில் பொறுப்புணர்வுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து சர்வதேச மட்டத்தில் கலந்துரையாடுதல் இம்முறை மாநாட்டின் சிறப்பம்சமாகும்.
03 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு மாநாட்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் முன்னணி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டின் முதலாவது அமர்வில் பூட்டான் ஒளிபரப்பு சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி டோர்ஜி டஷி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் ஆசிய பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஹமட் நதீம் மற்றும் பூட்டான் அரசாங்கத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் தாஷோ டஷி வெங்மோ ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இம்முறை மாநாட்டின் மிக முக்கிய கலந்துரையாடலான ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கற்ற பாடங்கள் மூலம் 'ஊடகங்கள் வாயிலாக உயிர்களைப் பாதுகாத்தல்' என்ற கலந்துரையாடலில் இலங்கை மற்றும் மகாராஜா ஊடக வலையமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி Newsfirst புதிய ஊடகப் பணிப்பாளர் ஜனித மென்டிஸ் விசேட பேச்சாளராக கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனித மென்டிஸ், Newsfirst நிறுவனம் கொண்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செய்தி அறை குறித்து சர்வதேச ஊடகத் தலைவர்கள் முன்னிலையில் விளக்கமளித்தார்.
குறிப்பாக டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமையின் போது பாரம்பரிய தொலைக்காட்சி ஊடகங்களையும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்து, நியூஸ் ஃபெஸ்ட் குழுவினர் அந்த நிலைமையை வெற்றிகரமாக கையாண்டு பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு எவ்வாறு பங்களிப்பு செய்தனர் என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.
பாரம்பரிய ஒளிபரப்பாளர் என்ற வரம்பிற்கு அப்பாற்பட்டு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்களை வழங்குவதில் நியூஸ் ஃபெஸ்ட் கொண்டுள்ள நடைமுறைகள் சர்வதேச ரீதியில் பெரும் பாராட்டை பெற்றன.
மாநாட்டின் அடுத்த 3 நாட்களில் பத்திரிக்கைத்துறை, தரவு பகுப்பாய்வு, அனர்த்தங்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த தவறான தகவல்களைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக செயற்கை நுண்ணறிவை எவ்வாறு தீவிரமாகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்துவது என்பது குறித்து மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.
