ஹேமசிறிக்கு எதிரான வழக்கு : நீதிமன்ற உத்தரவு

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஜூலை 31ஆம் திகதி அறிவிக்குமாறு உத்தரவு

by Staff Writer 15-06-2026 | 6:44 PM

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நிதிபதிகள் குழாம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையிலும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக குற்றவியல் ரீதியாகக் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான ஹேமசிறி பெர்ணான்டோ சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, வாய்மொழி மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்திருந்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி அறிவிப்பதற்கு திகதி நிர்ணயித்தனர்.

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக குற்றவியல் ரீதியாகக் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளும் கடந்த வௌ்ளிக்கிழமை நிறைவடைந்திருந்தன.

அதற்கமைய, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி அறிவிக்கப்படுமென கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டது.