மரணதண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிமன்றம்

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனை தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்றம் வாசித்து உறுதிப்படுத்தியது..

by Staff Writer 15-06-2026 | 9:55 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட மரணதண்டனையின் தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்றம் இன்று(15) உத்தியோகபூர்வமாக வாசித்து உறுதிப்படுத்தியது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரனால் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 

மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னதாகவே சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுடன் இன்று ஏனைய குற்றவாளிகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் நிகழ்நிலை ஊடாகவும் நேரடியாகவும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

இதன்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சதீஸ்தரன் உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பகிரங்கமாக வாசித்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை மீண்டும் அழுத்தமாக உறுதி செய்துள்ளார்.

மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரணதண்டனையிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு சுவிஸ் குமார் உள்ளிட்ட 04 பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 06ஆம் திகதி நிராகரித்து மரணதண்டனையை உறுதி செய்தது.

இந்த வழக்கின் ஏனைய 02 பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2015 மே 13ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில், யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவியான சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட 07 பேருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாத்தினால் 2017 செப்டம்பர் 27ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரியே பிரதிவாதிகளால், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.