ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டார்..

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டார்..

by Staff Writer 10-06-2026 | 2:48 PM

Colombo (News 1st) 2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(10) சந்தேகநபராக பெயரிட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2024 ஜனவரி 03ஆம் திகதி அப்போதைய சட்ட மாஅதிபராகப் பணியாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைக்கமைய அவரை மீண்டும் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட்டார்.

2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களான லக்சிறி அமரசிங்க மற்றும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.