.webp)

Colombo (News 1st) நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டேசி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை அடுத்த மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(10) திகதி நிர்ணயித்தது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்குடன் இணைந்ததான மற்றுமொரு வழக்கு மேல் நீதிமன்றத்தின் இலக்கம் 8 நீதிமன்ற அறையில் விசாரணை செய்யப்படுவதாக அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஒஸ்வர்ல்ட் பெரேரா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அந்த வழக்கின் முதலாவது பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சவாலுக்குட்படுத்தி, பிரதிவாதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கை அடுத்த மாதம் 16ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயித்தார்.
2009 மார்ச் 31ஆம் திகதியிலிருந்து 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 வங்கிக் கணக்குகளில் பேணப்பட்ட 59 மில்லியன் ரூபாவை ஈட்டிய விதத்தை உறுதிப்படுத்தாமை காரணமாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டேவி ஃபொரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
