வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை குற்றவாளி தற்கொலை

வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை குற்றவாளி தற்கொலை

by Staff Writer 25-05-2026 | 3:35 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலைக்குள் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டு குற்றாவளியாக அறிவிக்கப்பட்ட 46 வயதான ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் சிறைக்கூடத்திற்குள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த 06ஆம் திகதி உறுதிசெய்திருந்தது.

உயிரை மாய்த்துக்கொண்ட ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயகுமார், சுவீஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சஷீகுமார், சந்திரா என அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரஹாசன், பெரியதம்பி என அழைக்கப்படும் சிவதேவன் துஷாந்தன் ஆகியோருக்கே உயர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்தது.

2015 மே 13ஆம் திகதி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.