.webp)

Colombo (News 1st) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குருநாகல் பிரதி மேயரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அஷார்தீன் மொய்னுதீன் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(09) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
03 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடபில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று பத்தரமுல்ல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
குருநாகல் பஸ் நிலையத்தை துப்புரவு செய்யும் ஒப்பந்தத்தை மாநகரசபை இரத்து செய்யவுள்ளதாக தெரிவித்து அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதைத் தடுக்கவும் அதற்கு எதிர்காலத்தில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்து சந்தேகநபர் இலஞ்ச பணத்தைப் பெற்றுள்ளார்.
பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாநகர சபை பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
