கபில சந்திரசேன மர்ம மரணம்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாளே சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன

by Staff Writer 08-05-2026 | 7:55 PM

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கொள்ளுப்பிட்டி 05 ஆம் ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இல்லத்தின் கீழ் மாடியிலுள்ள அறையொன்றின் கதவிற்கு அருகிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.  

அவரின் மரணம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று(08) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளனர்.  

இது சந்தேகத்திற்கிடமான மரணம் என பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

சம்பவ இடம் தொடர்பில் நீதவானின் கண்காணிப்பு அவசியம் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன சடலம் மீட்கப்பட்ட இடத்தை சோதனையிட்டார்.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 5 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுக்கப்பட்டிருந்தார்.

கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளை வழங்குவதற்காக தலா 15,000 ரூபா பணம் செலுத்தப்பட்டு 2 நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை அவமதித்துள்ள சந்தேகநபரின் பிணையை இரத்துச் செய்து ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நிறைவடையும் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம சந்தேகநபரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நேற்று(07) உத்தரவிட்டதுடன் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஆணையிட்டார்.

இந்நிலையில் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தாம் பெற்றுக் கொண்ட இலஞ்சம் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் கபில சந்திரசேன இதற்கு முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் விலீ கமகே ஆகிய மூவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.