ரணிலின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 29-04-2026 | 10:47 PM

Colombo (News 1st) 166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் போதுமான சாட்சியங்கள் உள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(29) சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுகவீனம் காரணமாக பிணையில் உள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன அறிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் மேலும் சில முக்கிய விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலம் மற்றும் Wolverhampton பல்கலைக்கழகத்தில் கோரப்பட்ட விபரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த பதில் ஆகியவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

Wolverhampton பல்கலைக்கழகத்தின் பதிலின் படி, ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் 2023 செப்டம்பர் 22 அன்று அந்த பல்கலைக்கழகத்தில் மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கும் நிகழ்வு மற்றும் அதனுடன் இணைந்த மதிய உணவு விருந்தில் கலந்துகொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் எந்தவொரு அரச தலையீடும் இருக்கவில்லை என்பதும் 2023 செப்டம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதமே அழைப்பிதழாக கிடைத்துள்ளது என்பதும் அந்த கடிதம் இராஜதந்திர முறைப்படி லண்டன் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அனுப்பப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தின் படி 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்த போது எந்தவொரு இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ சந்திப்புகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்
மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு 2023 ஜூலை 15ஆம் திகதியே Wolverhampton பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பு கிடைத்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு எப்படி செல்வது என அவர் யோசித்துக்கொண்டிருந்த போது, அவரது கணவரான முதலாவது சந்தேகநபருக்கு கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு பயணம் கிடைத்ததாகவும் அந்த பயணத்தின் போது ஒரு Transit-இல் மைத்ரி விக்கிரமசிங்க இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜூலை 15ஆம் திகதி கடிதம் குறித்த தகவல் வெளிவருவது இதுவே முதல் தடவை. இதற்கு முன்னர் இது பற்றி எதுவும் தெரியாது. முதலாவது சந்தேகநபருக்கு அமெரிக்கா மற்றும் கியூபா பயணம் உறுதியான அதேதினத்தில் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவும் நிச்சயிக்கப்பட்டிருப்பது பிரச்சினையாக உள்ளது. இந்த இருதரப்பினருக்கும் இடையே ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. Transit என்ற சொல்லுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது, யார் ஒரு Transit ஆக இவ்வளவு பெரிய நிகழ்ச்சிநிரலை தயாரிப்பார்கள்? இது திட்டமிட்டு மக்களின் கண்களை மறைத்துச்சென்ற பயணமாகும்.
மேற்கோள் நிறைவு

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடுகள் முரண்பாடாக உள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, இந்த இருநாள் பயணத்தில் எந்தவொரு இராஜதந்திர சந்திப்பும் நடைபெறவில்லை. இங்கு பொதுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வலுவான வழக்கு உள்ளது. ஏனெனில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக முதலாவது சந்தேகநபர் கூறுகிறார். ஆனால் அவரது மனைவி, இது கியூபா மற்றும் அமெரிக்க பயணத்தின் இடையிலான ஒரு Transit பயணம் என்கிறார். மைத்ரி விக்கிரமசிங்கவிடம் கடந்த 24ஆம் திகதி வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை விசாரணை அதிகாரிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். சட்ட விதிகளின் படி மைத்திரி விக்கிரமசிங்கவை இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்க முடியாது, ஏனெனில் முதலாவது சந்தேகநபர் அவரது கணவர். அவரை இந்த வழக்கில் சந்தேகநபராக சேர்ப்பதா, இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அவரது வாக்குமூலத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அது தீர்மானிக்கப்படும்
மேற்கோள் நிறைவு

தனது சேவைபெறுருக்கு இந்த பயணச் செலவுகள் குறித்து எந்த பொறுப்பும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன கூறியுள்ளார்.

இந்த பயணத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் மிக அதிகம் எனவும் இதன்மூலம் சில தரப்பினர் அதிக நன்மை அடைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதிபதி அவர்களே, இந்த பயணத்திற்காக 16 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாங்களும் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம். யார் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என நாங்கள் பார்ப்பதில்லை. இவ்வளவு பணம் எதற்காக செலவிடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த பயணத்திற்காக பிரித்தானிய அரசாங்கம் வாகனங்களை வழங்கியது. ஆனால் வாகனச்செலவு மட்டும் 3 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனது சேவைபெறுநர் அந்த வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. லண்டனில் தங்கியிருந்த ஹோட்டல் ரேணுகா ஹோட்டல் போன்ற ஒரு சிறிய ஹோட்டலாகும். ஆனால் உணவிற்காக மட்டும் 2 மில்லியன் செலவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு மாதம் சாப்பிடுவதற்கு கூட 2 மில்லியன் செலவாகாது. இங்கு ஒரு திருட்டு நடந்துள்ளது. இந்த பயண ஏற்பாடுகளைச் செய்த Skyvins நிறுவனம் பெரிய தொகைகளைக் குறிப்பிட்டு பணத்தை சூறையாடியுள்ளது. தூதரகமும் பயண ஏற்பாட்டாளர் நிறுவனமும் இணைந்து இந்த திருட்டை செய்துள்ளன. இது குறித்து தனியான விசாரணை நடத்தப்பட வேண்டும்
மேற்கோள் நிறைவு

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் பொதுப் பணத்தை எவரும் தன்னிச்சையாகச் செலவிட முடியாது என தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்:
மேற்கோள் ஆரம்பம்
வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் பொதுப் பணத்தை எவ்வாறு அப்படி செலவிட முடியும்? எவருக்கும் தமக்கு தேவையானபடி பொதுப் பணத்தை சூறையாட முடியாது. இது ஒரு விசித்திரமான Transit. இதன்போது விருந்துபசாரமும் நடந்துள்ளது. இதோ அந்த அழைப்பிதழ். ஓய்வெடுப்பதற்காக லண்டனில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். 32 மணிநேரத்திற்காக 162 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது முழுமையான திட்டமிடலுடன் பொதுப் பணத்தை செலவிட்டு சென்ற ஒரு பயணமாகும்
மேற்கோள் நிறைவு

போதுமான சாட்சியங்கள் உள்ளதாலும் ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணைகளை தாமதப்படுத்துவது அதன் பெறுமதியைக் குறைக்கும் என்பதாலும் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார
மேற்கோள் ஆரம்பம்
பொதுவாக ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணைகளை தாமதப்படுத்துவது அந்த விசாரணையின் பெறுமதியைக் குறைத்துவிடும். அதனால் தான் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து நீதிமன்றம் இவ்வளவு தூரம் வினவுகிறது. முதலாவது சந்தேகநபருக்கு எதிராக உள்ள சாட்சியங்களின் படி அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். இரண்டாவது சந்தேகநபர் பயணத்திற்கான நிதியை அனுமதிக்கும் செயன்முறையில் ஈடுபட்ட விதத்தின் படி, அவரது தவறான நோக்கம்  உறுதியாகிறது, எனவே அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். விசாரணையை தாமதப்படுத்தாமல் சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுவிக்க வேண்டும். முதலாவது சந்தேகநபரின் மனைவி குற்றவியல் நோக்குடன் செயற்பட்டதாக இதுவரை நீதிமன்றத்தில் எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் குற்றவியல் பொறுப்பு உள்ளதா என்பது குறித்து விரைவாக விசாரணை நடத்துங்கள். இவை அனைத்திற்கும் விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும்?
மேற்கோள் நிறைவு

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளை முடிக்க ஒருமாத காலம் போதுமானது என தெரிவித்தார்.

அடுத்த வழக்கு தவணைக்கு முன்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.