பொது அவசரகால நிலை நீடிப்பு

பொது அவசரகால நிலை நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 29-04-2026 | 3:12 PM

Colombo (News 1st) நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை தொடர்ந்து மக்களுக்கு நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் பொது அவசரகால நிலை கடந்த நவம்பர் 29ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டது.

பொது அவசரகால நிலைமை காணப்படுவதைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய விநியோகங்கள் மற்றும் தேவைகளை பேணுவதற்காக அவசரகால நிலைமை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியும் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவை, போக்குவரத்து, வீதிகள், நீர், உணவு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கள அதிகாரிகள், அம்பியூலன்ஸ்கள், மத்திய வங்கி, அரச வங்கிகள், காப்பீட்டு சேவைகள், நீர்ப்பாசனம், தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்கள், தாழ்நில மீட்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்பீட்டு ஆகிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.