கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை

by Staff Writer 28-04-2026 | 8:32 PM

Colombo (News 1st) சமாதான தீவில் சமாதான பாதயாத்திரையின் அரச நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(28) மாலை நடைபெற்றது.

ஜய ஸ்ரீ மகாபோதி கிளையை ஜனாதிபதி, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த மகா சங்கத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இன்று மாலை 4.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை அடைந்தனர்.

மூன்று பீடங்களிடனும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அரச நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி, அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்புப்படை பிரதானிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதி கிளை வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இரவு 7.20 அளவில் கொழும்பு 02, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச ஊடக வலையமைப்பின் தலைமையக வளாகத்தை வந்தடைந்தனர்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன், குழும பணிப்பாளர்களான ஷெவான் டெனியல், எஸ்.சி. வீரசேகர, MTV பிரதான நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி உள்ளிட்ட குழுவினர் மகா சங்கத்தினத்தினரை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, மகாசங்கத்தினத்தினர் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை நோக்கி பயணித்தனர்.

வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் முன்னெடுத்த அஹிம்சை செய்தியை உலகிற்கு கொண்டு சென்ற சர்வதேச சமாதான பாத்திரை, அதன் உண்மையான அர்த்தத்தை உலக மக்கள் புரிந்து கொண்டதால் முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்று, சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.

7 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற சமாதான பாதயாத்திரை உலகிற்கு அமைதி செய்தியை பரப்பியவாறு இன்று நிறைவடைந்தது..