கரந்தெனிய ராஜுவை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கரந்தெனிய ராஜுவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு - பொலிஸார்

by Chandrasekaram Chandravadani 21-04-2026 | 3:24 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான 'கரந்தெனிய ராஜு' என அழைக்கப்படும் சொபானஹந்தி சனத் டி சில்வா என்பவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபரை இன்று வரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜு கடந்த சனிக்கிழமை இரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.

துபாயில் இருந்து இந்தியாவிற்கு சென்று புதுடெல்லியில் தங்கியிருந்த போது இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தா இவரின் சகோதரராவார்.

கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜுவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினூடாக 15 பிடியாணைகள், 26 வௌிநாட்டு பயணத்தடை உத்தரவுகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலைகள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றங்கள் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட, கரந்தெனிய, எல்பிட்டிய, காலி பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

ஏனைய செய்திகள்