.webp)

Colombo (News1st) இந்த வார இறுதியிலும் திங்கட்கிழமையும் அதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஷெரில் அத்துகோரல கூறினார்.
சனி மற்றும் ஞாயிறு திங்கட்கிழமைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இதற்கமைய, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
எனவே, பயணிகள் பஸ் முனையங்களில் காத்திருக்குமாறும், பஸ் நிலையங்களுக்கு வெளியே சில சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலதிக கட்டணங்களைச் செலுத்தி, பாதுகாப்பற்ற முறையில் சேவையில் ஈடுபடும் பஸ்களில் பயணிக்க வேண்டாம் எனவும், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பணம் சுரண்டப்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பஸ் நிலையங்களுக்கு வருகை தந்து சட்டரீதியான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பயணிகளை அறிவுறுத்தினார். அத்துடன், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் திரும்பி வருவதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ் சேவைகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
பதுளை, பண்டாரவளை, நுவரெலியா, கண்டி மற்றும் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, அலுவலக ரயில் சேவைகள் இன்று(16) முதல் வழமை போன்றுஇடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள மக்களுக்காக இன்றும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
