.webp)

Colombo (News 1st) சித்திரை புத்தாண்டு இன்று(14) காலை இனிதே மலர்ந்தது.
சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன் பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த 60 ஆண்டுகளின் பட்டியல் நீள்கிறது.
படைத்தல் கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் பறைசாற்றுகின்றன.
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் முகங்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் போது உள்ளக அதிர்வுகளுக்கு தாக்குப்பிடிக்கும் இயலுமையை இலங்கை உலகிற்கு காண்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் போர் சூழல் நிலைமையில் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனிடையே, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடந்த காலங்களில் ஒருதேசமாக பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதார சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட விதம் முழு உலகிற்கும் முன்மாதிரி என பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதுவருட வாழ்த்து செய்தியிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
