சம்பத் மனம்பேரி எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில்..

by Staff Writer 25-02-2026 | 10:21 PM

Colombo (News 1st) தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சம்பத் மனம்பேரி எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி தொடர்பான விசாரணைகளின் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

இது தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கைக்கு அமைய 15 கிலோகிராம் 19 கிராம் ஐஸ் போதைப்பொருள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் பொலிஸாரால் இன்று(25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் விரைவில் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவார்கள் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

தெம்பிலி லஹிரு எனும் நபருக்கு எதிராக மித்தெனிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகள் மற்றும் வீரகெட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 06 வழக்குகள் வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறித்த வழக்குகள் எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கெஹெல்பத்தர பத்மே மற்றும் பாணந்துறை நிலங்க ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.