.webp)

COLOMBO (News 1st) - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று (09) (09)ஆஜர்படுத்திய போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் முன்னாள் அமைச்சரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
விசேட விடயங்களை அடிப்படையாக வைத்து அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கிய 20 துப்பாக்கிகள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள் 15 ரி - 56 ரக துப்பாக்கிகள் மற்றும் 09 மில்லிமீற்றர் ரக 05 துப்பாக்கிகளும் அடங்குகின்றன.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கிய ரி - 56 ரக துப்பாக்கிக்கான 1500 தோட்டாக்களும், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்கான 100 க்கும் அதிக தோட்டாக்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டு குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால், டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட சில துப்பாக்கிகளில் இருந்த கைத்துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு வெலிவேரியவில் கால்வாய் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான மாக்கந்துர மதூஷ் வழங்கிய தகவலுக்கமைய கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளுக்கமைய டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தார்.
