.webp)

Colombo (News 1st) அமெரிக்காவினால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நியூயோர்க் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களை ஏற்றிச்சென்ற விமானம் நியூயோர்க்கில் உள்ள Stewart Air National Guard தளத்தில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரையிறங்கியதன் பின்னர் வெனிசுவேலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் புரூக்ளினில் உள்ள தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மென்ஹெட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுவேலாவில் முறையான அரசாங்கம் அமைக்கப்படும் வரை அமெரிக்கா அந்நாட்டை நிர்வகிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டின் கீழ் வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீள கட்டியெழுப்பப்படும் என ட்ரம்ப் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
புளோரிடாவில் நேற்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து அவசர கூட்டத்தை நாளை(05) ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு பேரவையின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளின் ஆதரவுடன் கொலம்பியாவும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
