.webp)
-607642-552596.jpg)
Colombo (News 1st) தரம் 06இன் சர்ச்சைக்குரிய ஆங்கில பாடத்திற்கான மொடியுல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கை கல்வியமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில பாடத்திற்கான மொடியுலில் பொருத்தமற்ற வலைத்தளமொன்றின் முகவரி எவ்வாறு உள்ளடக்கப்பட்டது என்பது தொடர்பில் கண்டறிவதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கு மேலதிகமாக இந்த சம்பவம் தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக மற்றுமொரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் நாலக களுவெவ நியூஸ் ஃபெஸ்டுக்கு தெரிவித்தார்.
விவகாரத்திற்கு பொறுப்பானவர்களை கண்டறிவதற்காக மற்றுமொரு விசாரணைக் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய தரம் 06 ஆங்கில பாடத்திற்கான மொடியுலை விநியோகிப்பதற்கு முன்னதாக முன்னெடுக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் கல்வியமைச்சின் நிபுணர்களிடமிருந்து அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த நிபுணர்கள் குழு வழங்கும் பரிந்துரைக்கமைய தரம் 06 ஆங்கில வழிகாட்டியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கமைய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், தற்காலிகமாக தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
