சுகாதார அமைச்சின் அறிவிப்பு

மண்சரிவுகளினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் நிறுவுவ நடவடிக்கை

by Staff Writer 26-12-2025 | 5:41 PM

Colombo (News 1st) மண்சரிவுகளினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களில் இருந்து சுகாதார சேவையை விரைவில் கட்டியெழுப்புவதற்காக தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹங்சக விஜேமுனி கூறினார்.

சேதமடைந்துள்ள வைத்தியசாலைகளை அதே பிரதேசத்தில் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் 3 வைத்தியசாலைகளும் மத்திய மாகாணத்தில் 4 வைத்தியசாலைகளும் வட மேல் மாகாணத்தில் ஒரு வைத்தியசாலையும் இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மஹியங்கனை  வைத்தியசாலை மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் வௌ்ளம் காரணமாக உபகரணங்கள் சேதமடைந்ததாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.

நுவரெலியா வைத்தியசாலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனர்த்தங்களினால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு 21 ஆயிரத்து 742 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்டடங்கள், உபகரணங்கள், மருந்து வகைகள் போன்றவை அனர்த்தங்களினால் சேதமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.