.webp)

Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான அனுஷ்டிப்பு நிகழ்வு இன்று(26) காலை பெராலிய சுனாமி நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், சுனாமியினால் உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இதன்போது இணைந்திருந்தனர்.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று(26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுனாமி ஆழிப்பேரலைகளினால் அழிவடைந்த 50ஆம் இலக்க எஞ்சினுடனான ரயில் இன்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பெராலிய நோக்கி பயணித்தது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் குறித்த ரயிலில் பயணித்த சுமார் 2000 பேர் வரை காவு கொள்ளப்பட்ட சம்பவத்தை எவராலும் இலகுவில் மறந்து விட முடியாது.
இன்றும் அதே நினைவுகளுடன் அதே நேரத்தில் குறித்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பெராலிய நோக்கி புறப்பட்டது.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து 50ஆம் இலக்க ரயில் எஞ்சினுடன் பயணித்த ரயில் பெராலியவில் ஆழிப்பேரலைகளில் சிக்கியதால் சுமார் 2000 பேர் பலியாகினர்.
141 பயணிகள் காணாமல் போனதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
குறித்த ரயில் இன்று காலை 9.26 க்கு பெராலியவை அடைந்ததுடன் ரயிலில் பயணித்த அனைவரும் பெராலிய சுனாமி நினைவுதூபிக்கு அருகில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
மீண்டும் இத்தகைய துயரச் சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.
