வெலிகம தவிசாளர் கொலை : 3 சந்தேகநபர்கள் கைது

வெலிகம தவிசாளர் கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 26-10-2025 | 1:10 PM

Colombo (News 1st) வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த சுற்றிவளைப்பு திட்டமிடப்பட்ட பின்னர் அனுராதபுரம் - கெக்கிராவ 50 வீட்டுத்திட்ட பகுதியில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்று(26) அதிகாலை கைவிடப்பட்ட வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் கைது செய்யப்படும் வேளையில் அங்கிருந்த சிலர் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 12,65,000 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹெரோயின் மற்றும் ஐஸ் மற்றும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய குறித்த பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 0718 598 888 எனும் இலக்கத்திற்கு பொலிஸ் மாஅதிபர் அல்லது 0112 337 162, 0718 592 087  எனும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்க முடியும்.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.