''நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்..''

நாளை மறுதினம் முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 26-10-2025 | 6:53 AM

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை காரணமாக களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் வௌ்ள அபாய மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தெதுரு ஓயா, இராஜாங்கனை உள்ளிட்ட 15 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பீ.எஸ்.டீ.ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுதினத்தின்(28) பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.