.webp)
Colombo (News 1st) வவுனியா மாநகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன், பிரதி மேயர் பரமேசுவரன் கார்த்தீபன் உள்ளிட்டவர்கள் வவுனியா மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயராக செயற்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
வவுனியாவை சேர்ந்த S.K.விஜயகுமார் மற்றும் S.பிரேமதாஸ் ஆகியோர் முன்வைத்த எழுத்தாணை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலிலிருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட நீதிபதிகள் குழாத்தினர் மனுவை பரிசீலித்தனர்.
வவுனியா மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் பிரதி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரமேசுவரன் கார்த்தீபன் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜூன் 16ஆம் திகதி வவுனியா மாநகர சபையின் பதவியேற்பு விழாவில் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் பரமேசுவரன் கார்த்தீபன் ஆகியோர் மேயராகவும் பிரதி மேயராகவும் பதவியேற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்வில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படும் போது சட்டத்திற்கு முரணான வகையில் பிரதிவாதிகள் செயற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்ட பி.கார்த்தீபன் வவுனியா மாநகர சபை எல்லைக்குள் அன்றி வௌியில் வதிவிடத்தை கொண்டவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரரகள் அவரது நியமனம் சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் பரமேசுவரன் கார்த்தீபன் ஆகியோரை வவுனியா மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிக்கு நியமித்தமையை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வவுனியா மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்ததுடன் மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
மனுதார்கள் சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானார்.
பிரதிவாதிகள் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க ஆஜரானார்.