.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இராணுவத்தின் கேர்ணல் K.S.மத்துமகே கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சஹ்ரான் ஹஷீமின் கும்பலுக்கு தொடர்புள்ளதாக தகவல் காணப்பட்ட போதிலும் அது LTTE அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து விசாரணைகளை தவறாக வழிநடத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் குறித்த கேர்ணலுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டது.
அந்நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவிருந்த இந்த கேர்ணல், தியத்தலாவை இராணுவ பயிற்சி கல்லூரியில் தற்போது பணியாற்றி வருகிறார்.
அவரது மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று(21) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
கேர்ணல் K.S.மத்துமகே தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இதுவரை பிறப்பிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச இடைக்காலத் தடையுத்தரவுகளை நிறுத்திவைக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இன்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
தனது சேவைபெறுநர் 29 வருடங்கள் இராணுவ புலனாய்வு சேவைகளில் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான உறுப்பினர் என மனுதாரரான இராணுவ கேர்ணல் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான எவ்வித சாட்சியமும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் கைது செய்யப்பட மாட்டார்கள் என சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இத்தகைய அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்த 02 அதிகாரிகள் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிடுவது பாரிய பிரச்சினைக்குரிய விடயம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிய விரும்புவதாக கூறிய அவர், விசாரணைகள் இப்போது ஒரு அரசியல் விளையாட்டாக மாற்றப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமெனவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு சுமார் 11 நாட்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வு பிரிவும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்கள் நடத்தப்படும் இடங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்து இந்திய புலனாய்வு பிரிவு நாட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், பொலிஸாரின் செயற்றிறன் அற்ற நடவடிக்கைகளால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் செனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் காரணமாக புதிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் நேரத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படைகளை இழிவுபடுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை அந்த தொலைக்காட்சி வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து தப்பிச்சென்று தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய அசாத் மௌலானா செனல் 4-க்கு அளித்த நேர்காணலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போதைய விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அசாத் மௌலானா தெரிவித்த கருத்துகளின் உண்மை, பொய்யை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் ஜனாதிபதி சட்டத்தரணி நினைவு கூர்ந்தார்.
குறித்த விசாரணைகளை அந்த குழு நடத்தியதாகவும் சம்பந்தப்பட்ட அறிக்கைக்கு எந்த அடிப்படையோ செல்லுபடித்தன்மையோ இல்லை என ஏகமனதாக பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
அதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத்திடம் ஒரு கேள்வியை தொடுத்து இந்த விசாரணைகள் தொடர்பாக மனுதாரரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளதா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரரைக் கைது செய்வதா, இல்லையா என்பதை விசாரணை அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டுமென கூறினார்.
இந்த விசாரணை தொடர்பாக 68 பக்கங்களைக் கொண்ட விரிவான 'B' அறிக்கை ஜூலை 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையில் பல சாட்சிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
'B' அறிக்கையில் மனுதாரர் தொடர்பான விசாரணைத் தகவல்களும் உள்ளதாக அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
2018 டிசம்பர் மாதம் வவுணதீவு பகுதியில் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களை LTTE அமைப்பினர் கொலை செய்ததாக விசாரணையை திசை திருப்பும் தகவலை பொலிஸாருக்கு வழங்கிய சம்பவம் தொடர்பாக மனுதாரராக இராணுவ அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அதற்கமைய, 02 முன்னாள் LTTE உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலைகள் சஹ்ரானின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
வவுணதீவு பகுதியில் 02 பொலிஸ் உத்தியோத்தர்களின் கொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுவதாக இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அதன்படி 02 முன்னாள் LTTE உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலை சஹ்ரானின் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் இத்தகைய விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காது எனவும் அனுபவம் வாய்ந்த இராணுவ புலனாய்வு அதிகாரியான தனது சேவைபெறுநர் பலிக்கடாவாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் கூறினார்.
இருதரப்பினதும் விடயங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினர், மனுதாரரான இராணுவ கேர்ணலுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து அடுத்த விசாரணை தினத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு மேலதிகமாக இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை நீக்கக்கோரி பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கை தொடர்பாக நவம்பர் 6ஆம் திகதி எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இருதரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.