.webp)
Colombo (News 1st) தங்காலை, நெடொல்பிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மித்தெனியவில் நேற்று(06) கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்களும் இன்று கைப்பற்றப்பட்ட இந்த இரசாயனப் பொருட்களும் ஒரே தரப்பினரால் கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த இராசயனப் பொருட்களின் மாதிரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் நாளை(08) விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, மித்தெனியவில் நேற்று கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஜேவிக்ரம மனம்பேரிகே பியல் சேனாதீர என்ற 38 வயதுடைய நபரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் சகோதரராவார்.
தடுப்புக்காவலிலுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வௌிவந்த தகவலின் அடிப்படையில் மித்தெனியவிலுள்ள காணியொன்றிலிருந்து 50,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டன.