.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கப்பதற்காக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளது.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான TK 731 விமானத்தின் ஊடாக குறித்த குழு இன்று(07) காலை 6.45 அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் நாளை(08) ஆரம்பமாகவுள்ளது.
கூட்டத் தொடரில் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஐச் அமைச்சர் விஜித ஹேரத் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையை நாளை(08) முன்வைக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான குறித்த அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.
நிலையான அமைதிக்கான அடித்தளத்தை அமைத்து மாற்றத்தக்க சீர்திருத்தங்களைச் செயற்படுத்தவும் உண்மை மற்றும் நீதியை வழங்கவும் இலங்கை முழுவதுமுள்ள சமூகங்களிடமிருந்து புதிய அரசாங்கத்திற்கு வரலாற்று வாய்ப்பும் தெளிவான மக்கள் ஆணையும் கிடைத்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாத ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும் மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதும் இன்றியமையாதவையாகும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
நாட்டின் சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு இணங்க அடிப்படை அரசியலமைப்பை மேற்கொள்வதும் சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் மாற்றத்தக்க சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு அவசியமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பாதையில் இலங்கைக்கு உதவ ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான குழுவுடன் இணைந்து மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தயாராக உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு தடை விதிக்கவும் அதனை இரத்து செய்வதை விரைவுபடுத்தவும் அதற்கான எந்தவொரு மாற்றுச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்களால் இதற்கு முன்னர் வகுக்கப்பட்ட அளவுகோல்களுடன் இணங்குவதை உறுதி செய்வதும் அவசியம் என அந்த அறிக்கையின் முக்கியமான பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.