வடக்கு தெங்கு முக்கோண வலயம் அங்குரார்ப்பணம்

வடக்கு தெங்கு முக்கோண வலயம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

by Staff Writer 02-09-2025 | 3:01 PM

Colombo (News 1st) உலக தெங்கு தினத்தை முன்னிட்டு  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு , மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு தெங்கு முக்கோண  வலயம் இன்று(02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி  அனுர குமார திசாநாயக்க தலைமையில்  இடம்பெற்றது.

'நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் - கற்பகதரு வளம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் புதுக்குடியிருப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அமைச்சர்கள், அரச அதிகாரிகள்  உள்ளிட்ட தரப்பினர் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

2025ஆம் ஆண்டில் வடக்கில் 16,000 ஏக்கரில் தென்னை பயிரிடுவதை நோக்காகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2027ஆம் ஆண்டில் குறித்த அளவை 50,000 ஏக்கராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, முல்லைத்தீவு  மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா ஜனாதிபதி தலைமையில இன்று இடம்பெறவுள்ளது.

பரந்தன் - கரைச்சி - முல்லைத்தீவு வீதியின் நந்திக்கடலுக்கு அருகிலுள்ள குறித்த பாலத்தின் ஊடாக நாளாந்தம் 3,000-இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.

குறித்த பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 1.4 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் குறித்த பாலத்தை புதிய இருவழி பாலமாக நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்