யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ஜனாதிபதி தலைமையில் அடிக்கல்

by Staff Writer 01-09-2025 | 6:43 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று(01) விஜயம் செய்து பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்.மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் 298 மில்லியன் ரூபா நிதி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும் கிழக்கு, தென் மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், வலை பதப்படுத்தும் வசதிகள், வானொலி தொடர்பு மைய வசதிகள் உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தினூடாக விஸ்தரிக்கப்படவுள்ளன.

கச்சதீவை மக்களுக்காக பாதுகாக்கவும் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியப் போவதில்லையெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எமது நாட்டின் அனைத்து வளங்களையும் பாதுகாத்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என கூறினார்.

இதனிடையே யாழ்.நூலகத்தை ஈ-நூலகமாக அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.நூலகம் தீவைக்கப்பட்ட சம்பவமானது வரலாற்றில் சாபகரமான கறுப்பு புள்ளியாகுமென ஜனாதிபதி இதன்போது கூறினார்.

செம்மணி சித்துபாத்தியிலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மக்கள் கடவுச்சீட்டுகளுக்கு எளிதாக விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்திரையும் வெளியிடப்பட்டது.

முன்மொழியப்பட்ட யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதியின் தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்.மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள முன்மொழியப்பட்ட புதிய யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.