தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணைக்கு ஜனாதிபதி அனுமதி

by Staff Writer 06-08-2025 | 6:38 PM

Colombo (News 1st) தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(05) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 177 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்களிப்பிலிருந்து விலகி செயற்பட்டார்.

பொலிஸ் மாஅதிபரை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை 115 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் மார்ச் 25 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க அதிகாரிகளை நீக்கும் நடைமுறை சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையில் முறைகேடான நடத்தை மற்றும் ஊழல், கடுமையான அதிகாரத் துஷ்பிரயோகம், கடுமையான முறையில் கடமை தவறியமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.

சட்டத்திற்கமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தேஷபந்து தென்னகோன் 19 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக தீர்மானித்தது.