.webp)
Colombo (News 1st) பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பான செய்தி மஹியங்கனையில் பதிவாகியுள்ளது.
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவர் நேற்று முன்தினம்(22) கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது தமக்கு சொந்தமான ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தை அவர்கள் பஸ்ஸில் தவறவிட்டுள்ளனர்.
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவரும் மஹியங்கனையில் தாம் தங்கும் ஹோட்டலுக்கு சென்ற பின்னரே கைக்கடிகாரம் பஸ்ஸில் தவறவிட்டிருப்பதை உணர்ந்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, நுவரகல நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்ஸிலேயே குறித்த கைக்கடிகாரம் நேற்று முன்தினம் தவறவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரிடம் அவர்கள் விடயத்தைக்கூற குறித்த பஸ்ஸின் டிக்கெட்டில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு கைக்கடிகாரம் தவறவிடப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸை இரவு துப்புரவு செய்யும் போது நடத்துநர் கைக்கடிகாரத்தை கண்டெடுத்ததாகவும் அதனை உரியவர்களிடம் மறுநாள் ஒப்படைப்பதாகவும் பஸ்ஸின் உரிமையாளர் ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் சம்பந்தப்பட்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளிடமும் நடத்துநரால் கைக்கடிகாரம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட அவர்கள் இலங்கை மக்களின் நேர்மையை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
கண்டியைச் சேர்ந்த 32 வயதான சந்தன திசாநாயக்க எனும் நடத்துநரே நேர்மையான இந்த செயற்பாட்டில் ஈடுபட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.