சிவநேசதுரை சந்திரகாந்தனின் மனுவை விசாரிக்க அனுமதி

சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 23-07-2025 | 10:15 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(23) அனுமதி வழங்கியது.

எவ்வித அடிப்படை காரணமும் இன்றி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக தடுத்து வைத்துள்ளமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோரின் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

மனு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.