.webp)
Colombo (News 1st) திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பூர் கடற்கரை பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று(23) உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர் கடற்கரை பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மூதூர் நீதவான் தஸ்னீம் பௌசான் உள்ளிட்ட குழுவினர் இன்று கள விஜயத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நீதவான் குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் அங்கிருந்த அதிகாரிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் தொல்லியல் திணைக்களத்திடம் அந்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் 02 அறிக்கைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களத்தினர், புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினர், காணாமல் போனோர் அலுவலகத்தினர், தடயவியல் பிரிவினர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பூர் கடற்கரை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்திலிருந்து கடந்த 20ஆம் திகதி மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.