.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(02) தீர்மானித்தது.
இந்த மனு இன்று மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அபிநவ நிவஹல் பெரமுன கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பிரதிவாதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் போது அரச வைத்திய அதிகாரியாக பதவி வகித்து சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமையால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கு தகுதியற்றவர் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷோக் பரண் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு வாக்களிக்க எவ்வித சட்டபூர்வ உரிமையும் அவருக்கு இல்லை என சட்டத்தரணி கூறினார்.
எனினும் தமது சேவைபெறுநர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவர் சம்பளமின்றி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமையால் அரசாங்க ஊழியராக அவரை கருத்திற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி செனானி தயாரத்ன குறிப்பிட்டார்.
அதன்படி அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் என இல்லை எனவும் சட்டத்தரணி மன்றில் வாதிட்டார்.
இருதரப்பு விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.