.webp)
Colombo (News 1st) ஸ்டார்லிங்க்(Starlink) சேவை தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக SpaceX நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இன்று(02) அறிவித்தார்.
SpaceX உரிமையாளர் எலான் மஸ்க் தனது X தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
''ஸ்டார்லிங்க் சேவையை தற்போது இலங்கையிலும் பெற்றுக்கொள்ள முடியும்'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
வரையறுக்கப்பட்ட ஸ்டார்லிங்க் இலங்கை தனியார் நிறுவனத்திற்கு செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் இணையத்தள சேவையை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு சேவைகள் விநியோக அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024 ஆகஸ்ட் 14ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.
ஏற்கனவே 10 பாவணையாளர்களுக்கு முன்மாதிரி திட்டத்தின் கீழ் ஸ்டார்லிங்க் வசதி வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
உலகின் முன்னணி நிறுவனமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX நிறுவனத்தின் திட்டமாக ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அது 140-இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுகள் மற்றும் பூட்டான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மாத்திரமே தற்போது இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டார்லிங்க் என்றால் என்ன?
உலகம் முழுவதும் அதிவேக இணையத்தள சேவைகளை வழங்கும் வலையமைப்பே ஸ்டார்லிங்க் எனப்படுகிறது.
பொதுவான சேவை விநியோகங்களுக்கு அப்பாற்சென்று தூரப் பிரதேசங்களில் கூட சிறந்த சேவைகள் வசதியை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஸ்டார்லிங்க் அதிக வேகத்தில் தரவுகளை பரிமாறிக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான செய்மதிகள் கட்டமைப்பை பயன்படுத்துகிறது.
இதற்காக ஸ்டார்லிங்க் நிலைநிறுத்தியுள்ள செய்மதிகளின் எண்ணிக்கை 7,875 ஆகும்.
ஸ்டார்லிங்க் ஊடாக ரேடியோ அலைகள் மூலம் இணையத்தள தரவுகள் செய்மதிகளுக்கு அனுப்பப்படுவதுடன் அது புவியிலுள்ள பாவனையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஸ்டார்லிங்க் சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
ஸ்டார்லிங்க் இணையத்தளத்திற்கு அமைய இலங்கைக்கான மாதாந்த பெக்கேஜின் விலை 15,000 ரூபா என்பதுடன் தேவையான உபகரணங்களுக்கு மேலதிகமாக 118,000 ரூபா தேவைப்படுகிறது.