.webp)
Colombo (News 1st) இந்தியாவின் ராஜஸ்தானிலுள்ள விமானப்படை தளங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு(08) தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் அதனை இந்திய இராணுவம் முறியடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அனைவரையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றவும் இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய இராணுவத்தால் நேற்றிரவு(08) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாக்குதலில் பாகிஸ்தானிலுள்ள இராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நேற்று இரவு மீண்டும் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் இந்தியாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து விமானி வெளியேறி தப்பிச்செல்ல முற்பட்டபோது இந்திய பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்ததாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.
முன்னெச்சரிக்கையாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.