.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்(2025) பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியை தேசிய மக்கள் சக்தி தனதாக்கியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களில் 265 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
3,927 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியூடாக தெரிவாகியுள்ளனர்.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் 14 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே முன்னிலை பெற முடிந்துள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்கள் கிடைத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசுக் கட்சி 377 ஆசனங்களுடன் 35 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 06 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பன 02 உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா ஒரு உள்ளூராட்சி மன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, நுவரெலியா, பதுளை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, தெஹிவளை - கல்கிசை, மொரட்டுவை, கேகாலை, பண்டாரவளை, களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட மேலும் பல மாநகர சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாநகர சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி தனதாக்கியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றுள்ளது.
தங்காலை நகர சபை, வீரக்கெட்டிய பிரதேச சபை, பெலியத்த பிரதேச சபை உள்ளிட்ட சகல உள்ளூராட்சி மன்றங்களும் தேசிய மக்கள் சக்தி வசமாகின.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியதுடன் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் வெற்றியை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்தது.
மொரட்டுவை மாநகர சபை, கடுவல மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை, ஜயவர்தனபுர மாநகர சபை, கொலன்னாவ, பொரலஸ்கமுவ, மஹரகம, கெஸ்பேவ, சீதாவாக்கபுர, நகர சபைகளையும் கொட்டிக்காவத்த, ஹோமாகம, சீதாவாக்கை பிரதேச சபைகள் என அனைத்தும் தேசிய மக்கள் சக்தி வசமானது.
அதிக வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மீண்டும் தனது வெற்றியை உறுதி செய்தது.
கம்பஹா, நீர்கொழும்பு மாநகர சபைகள் உள்ளிட்ட 19 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
அனுராதபுரம் மாவட்டத்தின் 19 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியது.
பொலன்னறுவை மாவட்டத்தின் 08 உள்ளூராட்சி மன்றங்களையும் மொனராகலை மாவட்டத்தின் 10 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது.
காலி மாவட்டத்தில் இம்முறை தேர்தல் நடைபெற்ற 19 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.
17 உள்ளூராட்சி மன்றங்களை கொண்டுள்ள யாழ்.மாவட்டத்தின் யாழ்ப்பாணம் மாநகர சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை உள்ளிட்ட 12 உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது.
சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை ஆகியவற்றை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனதாக்கியது.
காரைநகர் பிரதேச சபை சுயேட்சை குழு வசமானது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி வெற்றி கொண்டது.
வவுனியா மாநகர சபைக்கு தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி ஆகிவற்றிலிருந்து தலா 04 உறுப்பினர்கள் வீதம் தெரிவாகியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை - மேற்கு நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி கொண்டுள்ளது.
முசலி, நானாட்டான் பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைத்துரைப்பற்று பிரதேச சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 07 உள்ளூராட்சி மன்றங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட மண்முனை தெற்கு, ஏறாவூர்ப்பற்று, போரதீவுப்பற்று, மண்முனைப்பற்று, கோறளைப்பற்று, மண்முனை மேற்கு ஆகிய பிரதேச சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி வென்றது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி வெற்றி பெற்றது.
காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை ஆகியவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும் கைப்பற்றின.
அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர சபை உள்ளிட்ட தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, லாஹுகல, மாஓயா, உஹன, தமன, நாமல்ஓயா ஆகிய பிரதேச சபைகள் தேசிய மக்கள் சக்தி வசமாகின.
காரைதீவு, நாவிதென்வௌி, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
அட்டாளைச்சேனை, இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அக்கரைபற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைகளை தேசிய காங்கிரஸும் கைப்பற்றின.
நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி கொண்டது.
நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் டிக்கோயா நகர சபை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, அம்பகமுவ, வலப்பனை, அக்கரப்பத்தனை, நுவரெலியா, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
நோர்வூட் மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேச சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகபட்ச உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
மலையக மக்கள் முன்னணி தலவாக்கலை லிந்துலை நகர சபையை இம்முறை தனதாக்கியது.
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை மற்றும் மாத்தளை மாநகர சபைகள், மாத்தளை, தம்புள்ளை, பல்லேபொல, நாவுல, வெலிகமுவ, உகுவெல, கலேவெல, இரத்தோட்டை ஆகிய பிரதேச சபைகளையும் தேசிய மக்கள் சக்தி தனதாக்கியது.
அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம ஆகிய பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மாநகர சபையையும் பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய, நகர சபைகளையும் உள்ளடக்கிய 17 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி தனதாக்கியது.
பதுளை மாவட்டத்தில் பதுளை மாநகர சபை, பண்டாரவளை மாநகர சபை, பசறை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச சபை, பதுளை பிரதேச சபை, லுணுகல பிரதேச சபை, ஹாலிஎல பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபையை சுயேட்சைக் குழு-1 வெற்றி கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை, பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றி கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கோமரன்கடவல, பதவி ஸ்ரீபுர, மொரவெவ மற்றும் சேருவில ஆகிய பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
குச்சவௌி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகிவற்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி கொண்டதுடன், இலங்கை தமிழரசுக் கட்சி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, திருகோணமலை நகர சபை வெருகல் பிரதேச சபை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா பிரதேச சபையையும் ஐக்கிய மக்கள் சக்தி கிண்ணியா நகர சபையையும் கைப்பற்றின.
கண்டி மாநகர சபை, நாவலப்பிட்டி நகர சபை, பஸ்பாகே கோரளை , குண்டசாலை, உடபலாத்த, கடுகண்ணாவை, வத்துகாமம் உள்ளிட்ட பல பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, அக்குறணை பிரதேச சபை, பன்வில பிரதேச சபை, கம்பளை நகர சபை, உடுதும்பறை பிரதேச சபை ஆகியவற்றில் வெற்றியை உறுதி செய்துள்ளது.
களுத்துறை மாநகர சபை, ஹொரணை நகர சபை, பாணந்துறை நகர சபை, மத்துகம பிரதேச சபை, புளத்சிங்கள பிரதேச சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களை வெற்றி கொண்டு தேசிய மக்கள் சக்தி வெற்றியை உறுதிப்படுத்தியது.
பாலிந்தநுவர பிரதேச சபை, அகலவத்தை பிரதேச சபை ஆகியவற்றை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ, நாத்தாண்டியா, ஆனமடுவ, நவகத்தேகம, புத்தளம், கற்பிட்டி, ஆராச்சிக்கட்டு, சிலாபம், கருவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு உள்ளிட்ட பிரதேச சபைகள், சிலாபம் நகர சபை, புத்தளம் மாநகர சபை ஆகியவற்றின் வெற்றியை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது.
மாத்தறை மாநகர சபை, மாத்தறை பிரதேச சபை உள்ளிட்ட அனை
த்து உள்ளூராட்சி சபைகளையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி கெண்டுள்ளது.