பட்டலந்த அறிக்கை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 29-04-2025 | 6:55 PM

Colombo (News 1st) பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்ட  மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பட்டலந்த அறிக்கை தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே குறித்த அறிக்கை இன்று(29) சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் 6ஆம் திகதி அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகளை அடுத்தே 88/90 காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை மீண்டும் பேசுபொருளாக மாறியது.

1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995 செப்டம்பர் 21ஆம் திகதி பிறப்பித்த உத்தரவிற்கு அமைய இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை அல்லது காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்வதே இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும்.

அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.ஜயவிக்கிரம தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி என்.ஈ.திசாநாயக்க செயற்பட்டார்.

சுமார் 3 வருடங்களாக சாட்சியங்களை சேகரித்த பட்டலந்த ஆணைக்குழு இறுதி அறிக்கையில் சில பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்தது.

நிறைவேற்றதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் இல்லாததால் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அறிக்கை அப்போதைய ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டாலும் அதிலிருந்த பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் விவாதமும் இடம்பெற்றிருந்தது.

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் தடுத்துவைக்கப்பட்ட இடங்கள், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.