உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஆராய விசேட குழுக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய விசேட குழு

by Staff Writer 22-04-2025 | 7:50 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மாஅதிபரால் இந்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் இந்த குழுக்கள் செயற்படவுள்ளன.

இந்த குழுக்களில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்  பிரதி பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களைத் தவிர பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய 5 உபக்குழுக்களும் அறிக்கையை ஆராயவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 67,400 பக்கங்களுக்கும் அதிகமானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது 5 தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கையில் 87 புத்தகங்கள் அடங்குகின்றன.

ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறித்த குழுக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாத புதிய விடயங்கள் இருந்தால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது போன்ற விடயங்கள் குறித்து தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் சிரேஷ்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரத்திற்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்