வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால்

வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை..

by Staff Writer 22-04-2025 | 11:45 AM

Colombo (News1st) பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறுதல் அடைந்ததையடுத்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் இலத்தீன் அமெரிக்கத் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பினால் நித்திய இளைப்பாறுதல் அடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

88 வயதான பரிசுத்த பாப்பரசர் இந்த வருடம் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

தனது உடல்நிலையின் முன்னேற்றம் தொடர்பில் தினமும் மக்களுக்கு வௌிப்படுத்துமாறு வத்திக்கானிடம் அவர் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக அன்றாடம் அவரது உடல்நிலையின் முன்னேற்றம் குறித்த தகவல்களை வத்திக்கான் வௌிப்படுத்தியது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் அவர் இறுதியாக கலந்துகொண்டு ரஷ்ய - யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல் - காஸா மோதல் என்பன முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறுதல் அடைந்ததையடுத்து 09 நாட்கள் துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியிடப்படவில்லை.

பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடலை தாங்கிய பேழை நாளை சென் பீற்றர்ஸ் பெஸிலிக்கா தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒன்று கூடிவருகின்றனர்.

பாப்பரசரின் விருப்பத்திற்கமையவே அவரின் இறுதி ஆராதனையினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இறுதிச் சடங்குகள் அன்றி எளிமையான முறையில் இறுதிக்கிரியைகள் இடம்பெற வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் கோரியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சைப்பிரஸ் ஈயம், மற்றும் ஓக்கினால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் புகழுடலை வைப்பதே பாரம்பரிய முறையாக இருந்தாலும் எளிய மர சவப்பெட்டியில் தேகத்தை வைக்குமாறு பரிசுத்த பாப்பரசர் கோரியிருந்ததன் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகளை வத்திக்கான் முன்னெடுத்துள்ளது.

தேகத்தை புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் உயரமான மேடையில் வைக்கும் பாரம்பரியத்தையும் நீக்குமாறு பரிசுத்த பாப்பரசர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பரிசுத்த பாப்பரசரின் நித்திய இளைப்பாறுதலையடுத்து உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பிறந்த ஆர்ஜென்டீனாவில் 07 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதே அறிவிப்பு பிரேசிலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.