''ஆயிரத்திற்கும் அதிக சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு''

ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

by Staff Writer 07-04-2025 | 4:05 PM

Colombo(News1st) கடந்த சில மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் பாதுகாப்புடனேயே கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டதாகவும் அவை படிப்படியாக அழிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்களும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவ்வாறான 1,700-இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக 500 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக அந்தந்த நாடுகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறான சிலர் பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.