.webp)
Colombo (News1st)3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(05) பிற்பகல் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்ததில் தாம் மகிழ்ச்சியடைவதாக சந்திப்பின் பின்னர் இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரை நினைகூர்ந்த இந்தியப் பிரதமர் அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியில் தமக்கு அறிமுகமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கையில் தமிழ் சமூகத்தின் சமத்துவம், கௌரவம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தாம் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது இந்த விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட பல திட்டங்களும், முன்னெடுப்புகளும் சமூக,பொருளாதார, கலாசார முன்னேற்றக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.