.webp)
Colombo (News1st) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று(05) முற்பகல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(04) நாட்டிற்கு வருகை தந்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியை தரிசிக்க உள்ளதுடன் இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் காரணமாக இன்று கொழும்பு காலிமுகத் திடல், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளிலும் பத்தரமுல்ல அபே கம வளாகத்திலுமுள்ள வீதியும் இடைக்கிடையே மூடப்படவுள்ளன.
இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் சாரதிகள் பொலிஸாரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாளை(06) முற்பகல் 7.30 முதல் 10.30 வரையான காலப்பகுதிக்குள் அனுராதபுரம் நகரம்ஜய ஸ்ரீ மகா போதிய மற்றும் ரயில் நிலையத்தை அண்மித்த பிரதான வீதிகள் இடைக்கிடையே மூடப்படவுள்ளன.
நாளைய தினம் புனித பூமி பகுதிக்கு வருகை தரும் யாத்ரிகர்கள் சிரமமின்றி வழிபாடுகளை மேற்கொள்வதற்காக மாற்றுவழிகளின் ஊடாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.