இந்திய பிரதமருக்கு ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண விருது

இந்திய பிரதமருக்கு ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண விருது

by Staff Writer 05-04-2025 | 2:30 PM

Colombo (News1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகலத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த உயரிய விருதை இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கி வைத்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஒன்றிணைந்த சந்திப்பில் உரையாற்றிய அனுர குமார திசாநாயக்க இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஆரம்பித்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி மீன்பிடி இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண விருது தனக்கு தனிப்பட்ட வகையில் வழங்கப்பட்ட விருது அல்லவெனவும் அது இந்தியாவிற்கு கிடைத்த ஒன்றெனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா சீதா எலிய - சீதையம்மன் ஆலயம், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயங்களின் புனரமைப்பு பணிகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் கருத்து வௌியிட்டிருந்தார்.

இதேவேளை, இங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு  உடன்படிக்கைகளும் இன்று(05) கைச்சாத்திடப்பட்டன

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோர் முன்னிலையில் குறித்த உடன்படிக்கைகள் ஜனாதிபதி செயலகலத்தில் கைச்சாத்திடப்பட்டன.

இதனையடுத்து சம்பூர் சூரிய சக்தி மின்னுற்பத்தி தொகுதி நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அத்துடன், வெப்பநிலை கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் உள்ளிட்ட இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

ஏனைய செய்திகள்